Monday, November 7, 2016

புதுக்கட்சியின் தலைவர் யார்? - ஊடகங்களை அச்சுறுத்திய பிரதமர்!


புதுக்கட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி எப்போதும் ஆதரவு அளிக்கும். ஆனால் அதன் தலைமைத்துவம் யாரிடம் இருக்கின்றது தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே விமல் வீரவங்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

இதன் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு மகிந்த ராஜபக்ச தலைமை ஏற்பார் என கருத்துகள் கூறப்பட்டு வருகின்றது ஆனாலும் அதன் தலைவர் யார் என்பது இன்னும் உத்தியோக பூர்வமாக அறியத்தரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பவர் பகிரங்கமாக ஊடகங்களுக்கு அச்சுருத்தல் விடுத்தவர். நாடாளுமன்றத்திலும் ஊடகவியளாலர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டவர்.

ஆனாலும் பிரதமரின் அல்லது வேறுநபர்களுடைய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய இந்த நாட்டின் ஊடகங்களும் மக்களும் தயாராக இல்லை என்பதே எமது நம்பிக்கை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.